யாழ். அல்லைப்பிட்டிப் பகுதியில் உள்ள பற்றைக் காணி ஒன்றிலிருந்து, இனந்தெரியாத நபர் ஒருவரின் எலும்புக்கூடுகள் உக்கிய நிலையில் மீட்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள பற்றைக் காணி ஒன்றில் எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன என்று பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்குப் பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து ஊர்காவற்றுறைப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
சுமார் 4 முதல் 6 மாதங்களுக்கு முன்னர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என்றும், அதன் பின்னரே உடல் இவ்வாறு எலும்புக்கூடாக மாறியிருக்கலாம் என்றும் பொலிஸார் முதற்கட்டச் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர். இருப்பினும், மீட்கப்பட்ட எலும்புக்கூடு எரிந்த நிலையில் தோற்றமளிப்பதாகக் கூறப்படுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த நீதிவான், மரண விசாரணை அதிகாரி மற்றும் கிராம சேவகர் முன்னிலையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இவை மேலதிக மருத்துவப் பரிசோதனைக்காகவும், உடற்கூற்று ஆய்விற்காகவும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை வெளிவந்த பின்னரே, இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகும் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். நீண்ட நாள்களாகக் காணாமல் போனவர்கள் எவராவது உள்ளனரா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் அல்லைப்பிட்டி கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.