வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தமது ராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று (17) கையளித்து, பதவி விலகியுள்ளனர்.
நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைக்கு இடமளிக்கும் வகையிலேயே அவர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று இன்று நியமிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே குறித்த ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணை நடவடிக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில அவர்கள் துறைசார் அமைச்சரும், செயலாளரும் ராஜினாமா செய்துள்ளனர்.
தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி,
“நிலக்கரி விநியோகம் தொடர்பாக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க எடுத்த தீர்மானத்தையும், 2009ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற நிலக்கரி இறக்குமதிகள் குறித்து முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் மூலம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளமை மூலம் ஊழலுக்கு எதிராகவும் மக்கள் ஆணையை நிறைவேற்றுவதிலும் ஜனாதிபதி கொண்டுள்ள துணிச்சலான உறுதியை தாம் பாராட்டுவதாகக்” – குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணை நடவடிக்கைகள் மிகவும் சுயாதீனமாகவும் எவ்வித பக்கச்சார்புமின்றியும் முன்னெடுக்கப்பட வேண்டும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விசாரணைகள் நடைபெறும் காலப்பகுதியில் தான் அந்தப் பதவியில் நீடிப்பது அதற்குத் தடையாக அமையலாம் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில், இன்று (17) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.