நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர மோதலில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 19 கைதிகள் உட்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் 10 பொலிஸ் குழுக்கள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றிரவுடன் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து 700 கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சுமார் 2,400 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில், இரு கைதிகள் குழுக்களுக்கிடையே நேற்று (05) முன்தினம் மதியம் முதன்முதலாக மோதல் ஏற்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய தரப்பினருக்கும் இடையிலேயே இந்த மோதல் வெடித்துள்ளது.
பாதாள உலகக் குழுவொன்றுடன் தொடர்புடைய கைதி ஒருவரின் தலைமையிலான குழுவே இந்த மோதலை ஆரம்பித்து வைத்துள்ளதாகத் தெரியவருகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற மோதலின் போது 2 கைதிகள் உயிரிழந்ததுடன், 34 கைதிகள் காயமடைந்தனர்.
சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்றி முன்தினம் இரவே நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று முற்பகல் 10 மணியளவில் மீண்டும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. கைதிகளுக்கு உணவளிப்பதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகள் சென்ற வேளையிலேயே இந்த அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொலிஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டனர். எனினும், அதன் பின்னர் சிறைச்சாலை அதிகாரிகள் மீது கைதிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுள் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் கொழும்பு, ராகம மற்றும் கம்பஹா ஆகிய வைத்தியசாலைகளுக்கும் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
நிலைமை மேலும் மோசமடைந்ததால், கலகமடக்கும் பொலிஸார், மேலதிக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டதுடன், விமானப்படையினரும் வான்வழிக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதேவேளை, கைதிகளின் உறவினர்களும் சிறைச்சாலை வளாகத்தை நோக்கித் திரண்டதால் அங்கு பெரும் பதற்ற நிலை உருவானது.
நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் இன்று மதியளவில் நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகள், சிறைச்சாலைக்குச் சொந்தமான பேருந்துகள் மூலம் ஏனைய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக மாற்றப்பட்டனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதற்கமைய நீர்கொழும்பு பொலிஸாரும், கொழும்பு குற்றப் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இதற்கிடையில் நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் முறையான மற்றும் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் அமையப்பெற்றுள்ள இக்குழுவில் மூவர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த சிறைச்சாலை கலவரத்தால் சிறைச்சாலை சொத்துகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.