முரளியின் வரலாற்றுப்படம்: வெளிவரும்போது அனைவருக்கும் பதிலளிக்கும்! (எதிரொலிக்கு விஜய்சேதுபதி பேட்டி)

banner


மெல்பேர்ணில் நடைபெற்ற இந்திய திரைப்படத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக கடந்த மாதம் பெரும் நட்சத்திரப்பட்டாள மொன்று இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்தது. அவர்களில் பொலிவூட் சினிமாவின் அரசன் எனப்படுகின்ற ஷாருக் ஹானின் வருகை ஹிந்தி ரசிகர்களுக்கு பூரிப்பை அழித்திருந்தது என்றால், தமிழ் ரசிகர்களுக்கு விஜய் சேதுபதியின் பிரசன்னம் மிகப்பெரிய பரவசத்தை கொடுத்திருந்தது.

தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் இம்முறை திரைப்பட விழாவில் சிறப்பு
விருதினை வென்றிருந்த காரணத்தினால், அந்தத் திரைப்படத்தின் சார்பில் அதில் நடித்த விஜய் சேதுபதியுடன் நாயகி காயத்ரியும் கூடவே வந்திருந்தார். திரைப்படத்திருவிழாவை முன்னிட்டு மெல்பேர்ணில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு, விருது வழங்கும் நிகழ்வு ஆகியவற்றுடன், சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தொடர்பான கேள்வி - பதில் நிகழ்ச்சியிலும்கூட விஜய் சேதுபதி - குமாரராஜா - காயத்ரி கூட்டணி கலந்துகொண்டது.

ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஷாருக் ஹான் அனைவரது கண்களிலும் பிரகாசமான நட்சத்திரமாக தெரிந்தாலும், அவரோ விஜய் சேதுபதியுடன் மிகவும் அந்நியோன்யமாகவும் அவரின் நடிப்பில் அசந்துபோனவராகவும் காணப்பட்டார். ஊடகவியலாளர் மாநாடு ஆரம்பிக்கும் முன்னரே தூரத்தில் வந்துகொண்டிருந்த விஜய் சேதுபதியை 'விஜய்' - என்று அழைத்து தனக்கு அருகில் இருத்திக்கொண்டார். ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும்போதுகூட, ஏனைய மொழிப்படங்களில் நீங்கள் அதிகம் நடிக்காதமைக்கு காரணத்தை கேட்டபோது - தனக்கு மொழிப்பிரச்சினை என்பது பெரும் துயரம் என்று ஹேராம் அனுபவத்தை குறிப்பிட்டு, விஜய் சேதுபதியின் நடிப்பைப் பாராட்டினார். விஜய் சேதுபதி தற்போது தமிழில் கலக்கிக் கொண்டுவருவதை பெருமையோடு அங்கு பகிர்ந்துகொண்டார். இது அருகிலிருந்த விஜய் சேதுபதிக்கு பெருமையாக இருந்தது மாத்திரமன்றி, வெட்கத்தையும் ஏற்படுத்திவிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

அன்றைய ஊடகவியலாளர் மாநாடு முடிந்தபின்னர், விஜய் சேதுபதி, குமாரராஜா ஆகியோருடன் தனிப்பட சந்தித்து ''எதிரொலி'' யின் சார்பில் செவ்வி காண்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. எங்கு திரும்பினாலும் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் நிரம்பிக் கிடந்த அந்த ஊடகவியலாளர் மாநாட்டில், தமிழில் 'வணக்கம்' - என்று கூறிக்கொண்டு செவ்விக்காக சென்றபோது விஜய் சேதுபதி, எக்ஸ்ட்ரா புன்னகையோடு 'வாருங்கள் வாருங்கள்' என்று கைலாகு கொடுத்து ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டார்.

'எதிரொலி'யை அறிமுகம் செய்துகொண்டு, போன மாத பத்திரிகையை கையில் கொடுத்தோம். பத்திரிகையை புரட்டிப்பார்த்தவாறு 'தேர்தல் கால தேநீர் கடைகள் திறந்தன'... 'நாடும் நாட்டு மக்களும்' - நல்ல தலைப்பு என்றார். அதற்குப்பிறகு அந்த குறுகிய செவ்வி இவ்வாறு ஆரம்பித்து தொடர்ந்தது.


கேள்வி: சூப்பர் டீலக்ஸூக்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பை வைத்து பார்க்கும் போது இப்படி வெளிநாடுகளில் நடைபெ றும் திரைப்பட விழாக்களுக்கெல்லாம் அது பரிந்துரைக்கப்படும்- விருதுபெறும் என்று எதிர்பார்த்தீர்களா?

பதில்: முதல் அந்தப்படம் நடிக்கும்போது எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் வரும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் திருநங்கையாக நடித்த அந்த கதாபாத்திரத்தை எவ்வளவு தூரம் பண்ணுவேன் என்பதில் எனக்கு பெரிய சந்தேகம் இருந்தது. ஆனால் எனக்கு இயக்குனர் மீது பெரிய நம்பிக்கை இருந்தது. மற்றையது இங்கு இப்படி விருது வழங்கப்படுவதையெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை.
கேள்வி: முன்னணி நடிகராக வலம்வந்துகொண்டிருக்கும் சூழலில் இப்படி ஒரு சவாலான பாத்திரத்தை நீங்கள் ஏற்றுக்
கொண்டதற்கான காரணம் என்ன?

பதில்: சினிமாதான் எனக்கென்று ஒரு இமேஜை கொடுத்தது. பிறப்பிலேயே இது எனக்கு வரவில்லை. ஆகவே, இது வெற்றி
யளிக்குமா இல்லையா என்று நான் பார்ப்பதில்லை. செய்யும் வேலையை ரசித்துப் பண்ணுவேன். இந்தக் கதாபாத்திரத்தால் எனக்கு ஏதும் பாதிப்பு வருமா என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. ஏற்கனவே சொன்னதுபோல இயக்குனர் குமாரராஜா மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. அதனால் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. அடுத்தது இதுதான் எல்லை என்று நான் எப்போதும் வரையறுத்துக்கொள்வதில்லை. எதையுமே முயற்சி செய்து பார்ப்பது என் இயல்பு.
கேள்வி : நடிகன் என்பதற்கு அப்பால் மக்கள் உங்களை விரும்புவதற்கான காரணங்களில் ஒன்று, வாழ்க்கையை நீங்கள் புரிந்துகொள்ளும் விதம். மற்றையது பரந்துபட்ட சிந்தனை போன்றவை என்று கூறலாம். இது வாழ்க்கையில் அடிபட்டு பல சவால்களைத் தாண்டி வந்ததால் ஏற்பட்ட தெளிவா? அல்லது இயல்பிலேயே உங்களுக்கு அது கைவந்ததா?

பதில்: எனக்கு வாழ்க்கை மீது எப்போதுமே கேள்விகளும் சந்தேகங்களும் இருந்துகொண்டே இருக்கும். இயற்கையாகவே எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும். சிறு வயதில் மிகுந்த தாழ்வு மனப்பான்மை உள்ள ஓர் ஆளாக நான் இருந்தேன். அதனால் நிறைய கேள்விகளும் சந்தேகங்களும் என்னைச் சுற்றிக் கொண்டே இருக்கும். இன்னும் இருக்கிறது. ஒவ்
வொரு கட்டத்திலும் வேறுவேறு விதமாக உள்ளன. இப்போது பல கதாபாத்திரங்கள் பண்ணிய அனுபவம், பல மனிதர்களைச் சந்திக்கும் அனுபவம், இப்போது வாழ்க்கை இருக்கும் நிலை, நம்மைச் சுற்றி நடக்கும் அரசியல் இவை எல்லாவற்றின் மீது ஒரு கேள்வி வந்துகொண்டே இருக்கும். அதனால் வாழ்க்கையின் மீதிருக்கும் தத்து வங்கள் மாறிக்கொண்டே இருக்கும். அடிப்படையில் நான் வாழ்க்கையைப் பற்றிய புரிதல், தத்துவம் மிகுந்த ஆள்தான்;. அது மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் வாழ்க்கையைப் பற்றிப் புரிந்துகொள்வது மிக முக்கியம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அதுதான் இங்கு பிரதானம். நான் புரிந்துகொண்டதை அடுத்தவர்களுக்குச் சொல்லவேண்டும் என்று விரும்புவேன்.
கேள்வி: நிறைய புத்தகங்கள் வாசிப்பீர்களா?

பதில்: இல்லை. எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் கிடையாது.
கேள்வி: அப்படியென்றால் யாராவது ஒருவரை ஆதர்சமாகக்கொண்டு அவரைப் பின்பற்றும் வழக்கம் இருக்கிறதா?

பதில்: அப்படியெல்லாம் இல்லை. வாழ்க்கை, சக மனிதர்கள், இப்படி கேட்கப்படும் கேள்விகள், ஒவ்வொரு படத்திலிருந்தும் கிடைக்
கும் அனுபவம், மக்களின் வரவேற்பு, கதைகள் மூலமாக நிறைய கதாபாத்திரங்களுக்குள் பிரயாணம் பண்ணுவது, ஒரு கதா
பாத்திரமாக மாறி யோசிப்பது இவைதான் எனது புரிதலுக்கான காரணங்கள். உதாரணமாக திருநங்கையாக நடிப்பது வேறு திருநங்கையாகவே சிந்திப்பது வேறு. எனக்கு அப்படி சிந்திப்பது நிறையப்பிடித்திருக்கிறது. நான் அதை நடிப்பதாக நினைக்கவில்லை. அதை நான் நிஜம் என்று நம்புகிறேன். கதாபாத்திரமாகவே இருந்து சிந்திக்கும்போது அவர்களது வாழ்க்கைக்குள்ளேயிருந்து சிந்திப்பது. உங்களைப் பொறுத்தவரை உங்களது வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும். ஆனால் நான் நடிகனாக இருப்பதால் அந்தந்த கதாபாத்திரங்களாகவும் சிந்திக்க முடியும். இல்லாவிட்டால் இயக்குனர் சொல்வதை மட்டும் பண்ணுவது போலிருக்கும். இப்படியாக அனுபவங்களால் ஆனவன்தான் நான்.
கேள்வி: நீங்கள் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எல்லாம் செய்திகளாக வெளிவந்திருக்கிருக்கின்றன. உண்மையில், நீங்கள் அந்தப்படத்தில் நடிக்கிறீர்களா? இல்லையா?

பதில்: ஆமா. நடிக்கப்போகிறேன்.
கேள்வி: இந்தப்படத்திற்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பையடுத்து அதிலிருந்து நீங்கள் விலகிவிட்டீர்கள் அப்படியென்றெல்லாம் செய்தி வெளியானதே?

பதில்: இரண்டையுமே அவர்களாகவே பேசிக்கொள்கிறார்கள். படம் வெளியாகும் போது அவர்களது சந்தேகங்கள் எல்லாவற்றுக்கும் விடை கிடைத்துவிடும். எந்தக் கேள்வியுமே இருக்காது. இது சொல்லப்படவேண்டிய படம் என்றுதான் நான் நினைக்கிறேன். அப்படத்தில் ஒற்றுமையைப் பற்றிபேசும் இடங்கள் மிக அற்புதமானவை. கிரிக்கெட் வீரர் என்பதைத்தாண்டி முரளிதரனின் வாழ்க்கையைப்பற்றி இந்தப்படம் அதிகம் பேசுகிறது. படம் வெளியானபின் எல்லோருக்குமே விடை கிடைக்கும்.
கேள்வி: உங்களைச் சுற்றி ஏற்படும் சர்ச்சைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: என்னை சுற்றி அடிக்கடி சர்ச்சை ஏற்படுவது வழக்கம். பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் உள்ள போலிக்கணக்குகள் மூலம் இது அதிகமாக நடைபெறும். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்லலாம். தஞ்சாவூருக்கு பக்கத்தில் யாரோ ஒருவர் புனிதநூலொன்றைப் பற்றி நான் தவறாக ஏதோ சொல்லிவிட்டேன் என்று போலியாக மீம் உருவாக்கி அதை பகிர்ந்திருக்கிறார். அது எப்படியே எல்லா இடமும் பரவிவிட்டது. இது போலிக்கணக்கு என்று எல்லோருக்கும் தெரியும்தானே என்று நினைத்து நான் பேசாமல் இருந்துவிட்டேன். ஆனால் எனக்கு தகவல் வந்தது உங்களுடைய வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறார்கள் என்று. அதற்குப் பிறகு அந்தக் காரியத்தைச் செய்தவரை எனது தரப்பு ஆட்கள் சென்று பார்த்தார்கள். அதன்பிறகு அவர் மன்னிப்பும்கேட்டு அதை இணையத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால், அவர் மன்னிப்புக்கேட்டது எல்லா இடமும் பரவவில்லை. இதுதான் இப்போதைய காலம். நிறையப்பேர் சுயலாபத்திற்காக இதைச் செய்கிறார்கள். எப்போதும் நான் நினைப்பது அல்டிமேட் தீர்வை நோக்கி எதுவும் போவதில்லையோ என்று. அப்போதைக்கு அந்தப் பிரச்சினையை விவாதிப்பது, பேசுவது ஆனால், நிஜமான தீர்வு என்ன என்பது உங்களுக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது.