மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவருக்கு மறியல்

banner

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 91 ஆம் கட்டை பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலைசெய்த கணவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





கந்தளாய் நீதிமன்ற நீதவான் திஷானி தேனபது முன்னிலையில் நேற்றைய தினம் (21) குறித்த கணவரை ஆஜர்படுத்திய போது இக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.





இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர் கந்தளாய் என்ற பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கடமையாற்றி வரும் தொலஸ்வாகே கெதர சமிந்த ஜயலத் (49வயது) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.





சம்பவம் குறித்து தெரியவருவதாவது கந்தளாய் வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் உக்குபண்டா அப்புஹாமிலாகே சிறானி புஷ்பலதா (44வயது) என்பவர் தனது கணவருடன் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கணவர் மோட்டார் சைக்கிளில் அவர் வருகை தந்து கொண்டிருந்த போது அவரை நிறுத்தி பேசிக் கொண்டு இருந்துள்ளார்.





இதேநேரம் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு நிலையில் அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த கூரிய ஆயுதத்தினால் தனது மனைவியை தாக்கியதாகவும் இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





குறித்த பெண்ணின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதி நீதிமன்றத்தினால் கிடைக்கப் பெற்றவுடன் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.





(அப்துல்சலாம் யாசீம்)