'குழந்தைகளுக்கு பால்மாகூட இல்லை' - தமிழகத்தில் தஞ்சமடைந்தவர்கள் கண்ணீர் மல்க தெரிவிப்பு

banner

" இலங்கையில் குழந்தைகளுக்கான பால்மா, மருந்து பொருட்கள்கூட கிடைப்பதில்லை." - என்று இலங்கையில் இருந்து சென்று தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகள் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளனர்.





இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த முல்லைத்தீவு மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்த சுசீகலா இது தொடர்பில் கூறியதாவது,





" எனது கணவர் இரும்பு பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கு அனைத்து பொருட்களும் பல மடங்கு விலை உயர்ந்து விட்டன. குழந்தைகளுக்கான பால்மா, மருந்து பொருட்கள் கூட கிடைக்காமல் கடுமையாக கஷ்டப்பட்டோம்.





குழந்தைகளை காப்பாற்றி உயிர் வாழ்வதற்காகவே படகோட்டிகளுக்கு ரூ. 50 ஆயிரம் கொடுத்து இங்கு வந்துள்ளோம். இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் குடும்ப அரசியலே முக்கிய காரணம்.





இவ்வாறு அவர் கூறினார்.





வவுனியா பகுதில் இருந்து 3 மாத கர்ப்பிணி மனைவியுடன் வந்த கோடீஸ்வரன் கூறியதாவது:-





இலங்கையில் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். விவசாயம் செய்வதற்கு விதைகள், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைக்காததால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனது மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த சூழ்நிலையில் மிகுந்த கவனத்தோடு அவரை கவனிக்க வேண்டும். இதனால் மனைவியின் தங்க நகைகளை அடகு வைத்து அந்த பணத்தின் மூலம் படகில் ஏறி இங்கு வந்து சேர்ந்துள்ளோம்.





இவ்வாறு அவர் கூறினார்.





இலங்கையில் இருந்து வந்த சுதா கூறியதாவது:-





இலங்கையில் கடும் நெருக்கடியில் பொதுமக்கள் அதிக கஷ்டங்களை சந்தித்து வாழ்ந்து வருகின்றனர். அங்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி ஒரு கிலோ 300, சீனி ரூ.200, பிரட் பாக்கெட் ரூ.200, ஒரு பிஸ்கட் பாக்கெட் ரூ.300 என அனைத்து அத்தியாவசிய பொருட்களும் பல மடங்கு விலை உயர்ந்து விட்டன. வேலைவாய்ப்புகள் கிடையாது, மின்சாரம் இல்லை, மருந்து பொருட்கள் கிடைப்பதில்லை.





குறிப்பாக குழந்தைகளுக்கான பால்மாகூட கிடைப்பதில்லை. குழந்தைகளுடன் தொடர்ந்து அங்கே வாழ முடியாத நிலை இருப்பதால்தான் குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிர் வாழ்வதற்காகவே படகோட்டிக்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்து இங்கு வந்துள்ளோம். தமிழ்நாடு அகதிகளாக வந்துள்ள எங்களை ஆதரிக்கும் என்ற முழு நம்பிக்கையில் தான் இங்கு வந்துள்ளோம் என கண்ணீருடன் கூறினார்.