அமெரிக்க உயர் நீதிமன்றம் கருக்கலைப்பு உரிமையை ரத்துச் செய்து தீர்ப்பளிப்பு

banner

அமெரிக்காவில் கடந்த பல வாரங்களாக சூடுபிடித்திருந்த கருக்கலைப்பு உரிமை தொடர்பான விவகாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தக் கூடிய தீர்ப்பு ஒன்றை நாட்டின் உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருக்கிறது.





கருக்கலைப்புக்கு அரசமைப்பு ரீதியாக வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புக்குள் தலையிட்டிருக்கின்ற நீதிமன்றம், சுமார் 50 ஆண்டுகள் சட்டரீதியாக்கப்பட்டிருந்த பெண்களது கருக்கலைப்பு உரிமைக்கு ஆப்பு வைக்கும் வகையில் அதனை ரத்துச் செய்து அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.





தீர்ப்பின் படி மாநிலங்கள் விரும்பினால் இனிமேல் கருக்கலைப்பு உரிமையைத் தம் விருப்பப்படி தடைசெய்யலாம்.





உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அமெரிக்காவில் பல மில்லியன் கணக்கான பெண்களது கருக்கலைப்பு
உரிமையைப் பறித்திருக்கிறது. கிட்டத்தட்ட அரைவாசி மாநிலங்கள் தத்தமது கருக்கலைப்புச் சட்டங்களில் மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் செய்வதற்குத் தயாராகிவருகின்றன.





13 மாநிலங்களில் கருக்கலைப்புச் சட்டங்கள் காலாவதியாகின்றன. தீர்ப்பை அடுத்து நாட்டில் கருக் கலைப்பு "சட்டவிரோதமானது" என்று அமெரிக்கச் சட்டமா அதிபர் அறிவித்திருக்கிறார்.





சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு 1973 இல் "Roe v. Wade" என்று அழைக்கப்படும் பிரபல கருக்கலைப்புத் தொடர்பான ஒரு வழக்கில் கருவுற்ற பெண்களுக்கு அதனைக் கலைக்கும் உரிமையை வழங்குவதை அரசமைப்பில் சேர்க்கும் விதமான வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. அதற்கு முன்பு அமெரிக்க அரசமைப்பில் தனி மனித உரிமைகள் தொடர்பான எந்தப் பிரிவுகளிலும் கருக்கலைப்பு உரிமை இடம்பெற்றிருக்கவில்லை.





கருக்கலைப்பு உரிமை அரசமைப்பில் பாதுகாக்கப்பட்டிருந்த நிலையிலும் அமெரிக்க சமூகத்தில் அது தொடர்பானபிளவுகளும் விவாதங்களும் நீடித்தேவந்தன. கருக் கலைப்பு வயது, கருவின்காலம், மதம், பாரம்பரியம் சார்ந்த நெறிகள் எனப் பல விதமான முரண்பாடுகளுடனேயே கருக்கலைப்புச் சட்டங்கள் அங்கு மாநிலத்துக்கு மாநிலம்வேறுபாடாக நடைமுறைப்படுத்தப்படு கின்றன.





ஐந்த தசாப்தங்கள் கழித்து இப்போது வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு பெண்களின் கருக்கலைப்பு உரிமையை அரசமைப்புச்சட்ட ரீதியாக அன்றி மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளால் தீர்மானிக்கப்படுகின்ற அரசியல் விவகாரம் போன்று மாற்றிவிட்டுள்ளது.





இதனால் நாட்டில் இந்த விவகாரம் தொடர்பில் அரசியல் பிளவுகள் மேலும் வலுப்பதற்கான வழி அகலத் திறக்கப்பட்டுள்ளது. நாடெங்கும்புதிதாகப் போராட்டங்களை நடத்த பெண் உரிமை இயக்கங்கள் தயாராகி வருகின்றன.





தீர்ப்பு நாடெங்கும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ள நிலையில் அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் உருவாகிவருகின்றன. தீர்ப்பு வெளியாகி சில மணிநேரங்களுக்குள்ளாகவே அதிபர் ஜோ பைடன் அது தொடர்பாக விசேட உரையாற்றவுள்ளார் என்ற அறிவிப்பு வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவந்துள்ளது.





பாரிஸிலிருந்து குமாரதாஸன்