சுடுநீராகும் கடல் நீர்!

banner

சமீபத்திய வெப்ப அனலைத் தொடர்ந்து காடுகள் தீப்பற்றி எரிகின்ற அதேசமயம் கடல் நீரின் சாதாரண வெப்ப நிலையும் அதிகரித்துள்ளது. பிரான்ஸின் தெற்கே உள்ள அழகிய மத்தியதரைக் கடற் கரையோரங்களிலும் கோர்சிகா தீவிலும் (Corsica) கடல் நீரின் வெப்பம் 30°C ஆக உயர்ந்துள்ளது.





மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள கோர்சிகா தீவின் கிழக்குக் கரை நகரான அலிஸ்ரோவில் (Alistro) கடல்நீர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 30.7°C அளவுக்கு வெப்பத்துடன் காணப்பட்டதாக அளவிடப்பட்டுள்ளது. சாதாரணமாக இதே காலப்பகுதியில் கடல் நீரின் வெப்ப அளவை விடஇது 4- 6°C அதிகமாகும்.





உல்லாசப்பயணிகள் நிரம்பியுள்ள French Riviera கடற்கரைகளில் குளிப்போர் தண்ணீரின் வெப்பம் உயர்ந்திருப்பது கண்டு மகிழ்ச்சிவெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த வழமை மாற்றம் கடல் வாழ் உயிரினங்களது சூழல் கட்டமைப்பிலும்(ecosystem) கடல் உயிர்ப் பல்வகைமையிலும்(biodiversity) பெரும் தாக்கத்தையும் அழிவுகளையும் ஏற்படுத்தும் என்று சூழலியல் நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.





கடல் உயிரினங்களின் முக்கிய பல்லுயிர் மையமாக விளங்குகின்ற மத்தியதரைக் கடல் நீரில் ஏற்பட்டிருக்கின்ற வெப்ப அதிகரிப்பு சமுத்திர அடியில் பவளப்பாறைகள்மற்றும் உயிரினங்களின் வாழ்விடங்களை அழித்துவிடும் என்று அஞ்சப்படுகிறது. அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் சில இறந்துபோகவும் புதிய சில உயிரினங்களின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கும் இந்த வெப்ப நிலை காரணமாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.





ஆபிரிக்காவின் சஹாராவில் இருந்து வருகின்ற வெப்ப அனல் காற்று ஐரோப்பாவின் பல நாடுகளில் கோடை வெப்பத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. பிரான்ஸின் பல இடங்களில் காடுகள் இன்னமும் எரிந்து கொண்டிருக்கின்றன. கடும் வெப்பத்தின் தாக்கம் தரையிலும் கடலிலும் உணரப்படுகிறது.





வரும் வாரத்தில் மற்றொரு வெப்ப அனல் காற்று பிரான்ஸின் பல பகுதிகளிலும் மீண்டும் அதிகூடிய வெப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.





தாஸ்நியூஸ் - பாரிஸ்.