நியூயோர்க்கில் சல்மான் ருஷ்டி மீது கழுத்தில் கத்தி வெட்டு!

banner

புக்கர் பரிசு வென்ற சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (Salman Rushdie) மீது நியூயோர்க்கில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள சௌராக்குவா நிலையத்தில் (Chautauqua Institution) உரையாற்றிக்கொண்டிருந்த சமயத்தில் நபர் ஒருவர் திடீரென மேடைக்கு வந்து 75 வயதான ருஷ்டியைத் தாக்கினார் என்று கூறப்படுகிறது.





தாக்குதலாளி கத்தி ஒன்றினால் ருஷ்டியின் கழுத்தை இலக்குவைத்துள்ளார் என்று முதலில் வெளியான செய்திகள் தெரிவித்தன. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுவதற்கு முன்பாக மேடையில் வைத்து அவருக்கு அவசர முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்படும் காணொலிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.





தாக்குதலாளி பிடிக்கப்பட்டு பொலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது.





ருஷ்டிக்கு கழுத்தில் கத்திவெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது என்பதை நியூயோர்க் பொலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது நிலை பற்றி மேலதிக தகவல்கள்





தெரிவிக்கப்படவில்லை. பலத்த பாதுகாப்புடன் நடமாடுகின்ற அவரைத் தாக்குதலாளி எவ்வாறு நெருங்க முடிந்தது என்பது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.





இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் ருஷ்டி அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் வாழ்ந்தவர். 1988 இல் அவர் எழுதி வெளியிட்ட "சாத்தானின் வசனங்கள்" (“The Satanic Verses") நாவலை அடுத்து மத நிந்தனைக் குற்றத்திற்காக ஈரானில் அவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. அவரது தலையைக் கொய்பவர்களுக்கு மூன்று மில்லியன் டொலர்கள் சன்மானமும் அறிவிக்கப்பட்டது. உலகெங்கும் உள்ள தீவிர இஸ்லாமிய மதவாதிகளால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதை அடுத்து ஒரு தசாப்த காலம் அவர் தலைமறைவாகியிருந்தார்.





ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த சல்மான் ருஷ்டி, அந்த மதத்தின் வழிமுறைகளை மீறிய நார்த்திகராகமாறினார். இஸ்லாம் தொடர்பான அவரது கருத்துகள் உலகளாவிய
சர்ச்சைகளில் சிக்கின. அவரது நூல்கள் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன.





தாஸ்நியூஸ் - பாரிஸ்.