'பிரதேச, மாவட்ட செயலகங்களுக்கு இராணுவத்தினரை நியமிக்க திட்டம்'

banner

பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஆகியவற்றுக்கு இராணுவ அதிகாரிகளை நியமிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துவ பண்டார தெரிவித்தார்.





நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" உலகில் மிக சிறந்த நிர்வாக சேவை இலங்கையில் இருக்கின்றது. அதிகாரிகளும் இருக்கின்றனர். காலனித்துவ ஆட்சியின்போதும் அதன்பின்னரும் சிவில் சேவைகளுக்கு நிர்வாக அதிகாரிகளே நியமிக்கப்பட்டனர்.ஆளுநர் பதவிகூட நிர்வாக மட்டத்திலான அதிகாரிகளுக்கே வழங்கப்பட்டது. ஆனால் இன்று என்ன நடக்கின்றது?





சிவில் நிர்வாகத்தை உள்ளடக்கிய உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஏன் பாதுகாப்பு அமைச்சின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் ஆகியவற்றுக்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர் என எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இது உறுதியான தகவலா என தெரியவில்லை. இது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும். மியன்மாரில் போன்றதொரு நிலைமையை இங்கும் உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா?





இதற்கு முன்னரும் நிர்வாக சேவைக்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். துறைமுகம், நுகர்வோர் பிரிவுகள் உரிய வகையில் செயற்படவில்லை. நாம் இராணுவத்துக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் சிறப்பான நிர்வாக அதிகாரிகள் இருக்கின்றன. அவர்களை புறக்கணிக்கும் வகையில் செயற்படக்கூடாது. மருத்துவம், இராணுவம் , நிர்வாக சேவை என ஒவ்வொரு துறைக்கும் ஆட்கள் இருக்கின்றன. அவற்றை குழப்பிக்கொள்ளக்கூடாது. சிவில் நிர்வாக சேவை பாதுகாக்கப்படவேண்டும்." - என்றார்.