முதுகெலும்பு இருந்தால் நேரடியாக மோதுங்கள்! ராஜபக்ச தரப்புக்கு சம்பிக்க சவால்

banner

சர்வதேசத்தின் மத்தியில் நாட்டுக்கு ஏற்படும் அவப்பெயர் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.





எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.





"அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை.





இதற்கிடையில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இவ்வாறு இழுத்தடிப்பு செய்யப்படுகின்றது.





இந்த அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாது. பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. எனவேதான் எதிரணி உறுப்பினர்களை அரசியல் ரீதியில் மெளனிக்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.





இதன் ஓர் அங்கமாக எதிரணி அரசியல் தலைவர்களின் குடியுரிமையை 7 வருடங்களுக்கு பறிக்கலாம். அதற்கான பரிந்துரையை விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைக்க கூடும்.





நேர்வழியில் அரசியலில் மோதமுடியாததால்தான் குறுக்குவழியில் அரசாங்கம் பயணிக்க பார்க்கின்றது. அதற்கு எதிராக நாம் போராடுவோம். நேரில் மோதுமாறு ராஜபக்சக்களுக்கு சவால் விடுகின்றோம்." - என்றார்.