அவசரகால சட்டம் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

banner

அவசரகால சட்டத்தை நீண்டகாலத்துக்கு தக்கவைத்துக்கொள்வதற்கு அரசு எதிர்ப்பார்க்கவில்லை. அதேபோல கருத்து சுதந்திரம், போராட்டம் நடத்தும் சுதந்திரம் என்பனவும் பாதுகாக்கப்படும் - என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.





அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன்போது அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதற்கும், ஊடக அடக்குமுறையைக் கையாள்வதற்காகவுமே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என முன்வைக்கப்படும் கருத்துகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





“ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பல போராட்டங்கள் இடம்பெற்றன. கொரோனா தொற்று வேகமாக பரவிய அண்மைய காலப்பகுதியில்கூட ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இவை தடுக்கப்படவில்லை. எந்தவொரு போராட்டம்மீதும் தண்ணீர்தாரை பிரயோகமோ அல்லது தடியடி தாக்குதலோ மேற்கொள்ளப்படவில்லை. போராடும் மற்றும் கருத்து சுதந்திரம் எமது ஆட்சியில் தொடர்ந்தும் பாதுகாக்கப்படும்.





மக்களை சூறையாடும் வர்த்தகவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதுள்ள நுகர்வோர் அதிகாரச்சபை சட்டம் பலம்மிக்கதாக இல்லை. அச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், நாடாளுமன்றம்வந்து நிறைவேறுவதற்கு காலம் எடுக்கலாம். எனவே, அச்சட்டம் பலமடையும்வரையில்தான் அவசரகால ஏற்பாடுகள் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மாறாக அவசரகால சட்டத்தை நீண்டகாலம் வைத்துக்கொள்வது அரசின் எதிர்ப்பார்ப்பு அல்ல.” - என்றார்.