மனசாட்சியை அடகு வைக்கமாட்டோம் - விமல் சூளுரை

banner

” தவறை யார் செய்தாலும் அது தவறுதான். அதனை தைரியமாக சுட்டிக்காட்டுவோம். அமைச்சு பதவிக்காக மனசாட்சியை அடகுவைக்கமுடியாது. ” – என்று அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்தார்.





கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையகத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் நேற்று நடைபெற்ற ‘மக்கள் சபை’க் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





” கொவிட் நிலைமையால் கடந்த காலங்களில் ‘ஒன்லைன்’ ஊடாகவே அமைச்சரவைக் கூட்டங்கள் இடம்பெற்றன. வழமையாக நேரடியாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும்போது, அமைச்சரவை பத்திரம் தொடர்பில் மேலதிக தவல்கள் தேவையெனில் ஆய்வுக்காக காலஅவகாசம் வழங்கப்படும். அமைச்சரவை பத்திரம் பற்றி அமைச்சரவை செயலாளர் தெளிவுபடுத்துவார்.





‘கேஸ்’ விநியோகத்தின் நிறைவேற்று அதிகாரத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் திருட்டுதனமாகவே கொண்டுவரப்பட்டது. அது தொடர்பில் விளக்கமளிக்கப்படவில்லை. இது தொடர்பில் நீதிமன்றத்தில்கூட கருத்து வெளியிடுவதற்கு நான் தயார்.





அமைச்சு பதவிக்காக பொறுமைகாத்து, மனசாட்சியை அடகுவைத்து அரசியல் நடத்தும் கலாசாரம் எம்மிடம் எடுபடாது. மக்கள் வழங்கிய ஆணையை பாதுகாப்போம். அதற்காக போராடுவோம்.” -என்றார்.