அரச ஊழியர்களுக்கு வைக்கப்பட்டுள்ள பொறி

banner

அரச ஊழியர்களுக்கு சமூகவலைத்தள பாவனை தொடர்பில் தடைவிதித்து விடுக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தை மீளப்பெறுவதற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தினார். 





நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டம்மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" அரச ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் அரசை விமர்சிப்பதற்கு தடைவிதித்து உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரான மேஜர் ஜெனரல் ஒருவர் சுற்றுநிரூபமொன்றை வெளியிட்டுள்ளார். இது அரச ஊழியர்களின் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகும் என்பதுடன், அடிப்பமை உரிமை மீறலாகும். 





அரசின் தவறுகளை அரச ஊழியர்கள் சுட்டிக்காட்ட முற்படும்போது அவர்களை இராணுவ செயலாளர் கட்டுப்படுத்த முற்படுகின்றார். எனவே, சிவில் நிர்வாகத்தையும் இராணுவ ஆட்சியை நோக்கி நகர்த்தவா இம்முயற்சி?





சமூகவலைத்தளங்களில் கருத்துகளை வெளியிடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஊடகவியலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே,  அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் அரச அதிகாரிகளையும் கைது செய்வதற்கான நடவடிக்கையாகவே இந்த பொறிமுறை வகுக்கப்பட்டிருக்கலாம்.இது பெரும் அநீதியான செயல். எனவே, குறித்த சுற்று நிரூபத்தை மீளப்பெறுவதற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்றார்.