'நாட்டு மக்கள் தவிப்பு - மன்னிப்பு கோரினார் இராஜாங்க அமைச்சர்'

banner

" உரம் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடமும், நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் ." என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.





பொலன்னறுவை ஹிகுரான்கொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.





அவர் மேலும் குறிப்பிடுகையில்,





பாரிய நெருக்கடிகளை தற்போது எதிர்க்கொண்டுள்ளோம். மக்களுடன் உரையாற்றும் போது அவர்கள் வெளியில் புன்முறுவலுடன் கதைத்துக்கொண்டு ஆழ்மனதில் அரசாங்கத்தையும், எம்மையும் விமர்சிப்பார்கள் என்பதை நன்கு அறிவோம்.





ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் சிறந்தவர்கள், மிக நன்மை, ஆம் சேர் என எவ்வளவு நாட்களுக்கு குறிப்பிட முடியும்.





நாட்டு மக்கள் இன்று அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.மக்களை எடுத்துக்கொண்டால் நுகர்வோர், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.





அதுவே உண்மை. அரச சேவையும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. அரச சேவையாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுப்படுகிறார்கள். பிரச்சினைகளை மக்களிடமிருந்து மறைப்பதால் எவ்வித பயனும் கிடைக்கப்பெறாது.ஒரு சிலர் கறுப்பு வர்த்தகர்களை கொண்டு வந்து உரம் விநியோகத்தை முன்னெடுத்தார்கள். இன்று கறுப்பு சந்தை வர்த்தகர்கள் அதிகம் உழைக்கிறார்கள்.





சமையல் எரிவாயுவை நியாயமற்ற விலையில் விற்கிறார்கள். ஒரு மூடை சீமெந்தினை 3 ஆயிரத்திற்கு விற்கிறார்கள்.நாட்டு மக்களிடம் உண்மையை குறிப்பிட வேண்டும். தவறான தீர்மானங்களினால் நாட்டு மக்கள் ஒருசில நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். தவறுகளை திருத்திக்கொண்டால் முன்னேறி செல்லலாம்.





பெரும்பாலான அரச நிறுவனங்களின் ஊழியர்கள் பகல் 12 மணிக்கு பிறகு சேவையாற்றுவதில்லை. இன்று அனைவரும் ஒருவரையொருவர் தன்னிச்சையாக விமர்சித்துக்கொள்கிறோம்.





கறுப்பு சந்தையில் 8 ஆயிரம் ரூபாவிற்கு உரத்தை பெற்று விவசாய நடவடிக்கையில் ஈடுப்பட்டு விளைச்சலில்லாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடமும், எரிபொருள் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகிவற்றை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொது மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் என்றார்.