இங்கிலாந்தில் அரசியல் குழப்பம் - இரு அமைச்சர்கள் பதவி துறப்பு

banner

பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அரசின் முக்கிய கபினட் அமைச்சர்கள் இருவர் திடீரெனப் பதவி விலகியதை அடுத்து அங்கு பெரும் அரசியல் குழப்ப நிலை தோன்றியுள்ளது. பொறிஸ் ஜோன்சனின் தலைமைத்துவம் மீதான அதிருப்தியால் தாங்கள் பதவி விலக முடிவு செய்துள்ளனர் என்று நிதி அமைச்சர் ரிஷி சுனாக்





(Rishi Sunak), சுகாதார அமைச்சர் சஜித் ஜாவிட் (Sajid Javid) இருவரும் அறிவித்துள்ளனர்.





கொரோனா பொது முடக்க கால த்தில் விதிகளை மீறி நடத்தப்பட்ட மதுவிருந்துகள் தொடர்பான விவகாரத்தில் பொறிஸ் ஜோன்சன் மீது அண்மையில் அவரது கட்சிக்குள்ளேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. அச்சமயத்தில் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்த சுகாதார அமைச்சரும் நிதி அமைச்சரும் இப்போது அவரது தலைமைத்துவத்தை எதிர்த்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். இதனால் ஜோன்சனின் தலைமைத்துவம் தொடர்பான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.





தவறான பாலியல் நடத்தைக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த ஒருவரிடம் ஜோன்சன் அண்மையில் சில அரசுப் பொறுப்புகளை ஒப்படைத்திருந்தார். அந்த விவகாரமே கட்சிக்குள் அவரது தலைமைத்துவம் தொடர்பில் மேலும் அதிருப்தியையும் நெருக்கடியையும் உருவாக்கியிருக்கிறது. தனது தவறுக்காக அவர் மன்னிப்புக் கோரியிருக்கிறார். ஆனால் அதற்கு முன்பாகவே சிரேஷ்ட அமைச்சர்கள் இருவரும் தங்கள் பதவிவிலகல் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.





பழமைவாதக் கட்சியின் பிரதமரான ஜோன்சனின் பதவிக்கு இருவரது பதவி விலகல்களும் உடனடியாகப்பெரும் சவாலை உருவாக்கக் கூடும்.





ஆயினும் கட்சிக்குள் அவர் மீது உடனடியாகவே மற்றொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை யைக் கொண்டுவருவதற்கு விதிகள் இடமளிக்கமாட்டாது. அதற்குக் குறைந்தது ஒரு வருடகாலம் காத்திருக்க வேண்டும். பதவி விலகிய இருவரது பொறுப்புகளுக்கும் புதியவர்களது பெயர்களை ஜோன்சன் அறிவித்துள்ளார். கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கின்ற ஈராக்கியப் பூர்வீகம் கொண்ட நதீம் ஷஹாவி (Nadim Zahawi) நிதி அமைச்சுப் பொறுப்புக் கு மாற்றப்படுகிறார். டவுணிங் வீதி பிரதமர் அலுவலகத்தின் தலைமை அதிகாரியாகிய ஸ்டீவ் பார்க்லே(Steve Barclay) புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்படுகின்றார்.





தாஸ்நியூஸ் - பாரிஸ்