பிரிட்டிஷ் பிரதமரின் தலை குறிவைப்பு!

banner

பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பழமைவாதக் கட்சிக்குள் அவருக்கு எதிராகப் பெரும் போர் வெடித்திருக்கிறது.





நிதி, சுகாதாரத் துறைகளுக்கான மூத்த அமைச்சர்கள் இருவர் நேற்று முன்தினம் பதவி விலகியதைத் தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் ஆறு கபினட் அமைச்சர்கள் உட்பட 42 எம். பிகள் ஜோன்சனின் அரசில் இருந்து வெளியேறியுள்ளனர்.





அதனால் அவரது அரசாங்கம் பெரும் ஆட்டம் கண்டுள்ளது. இன்று மேலும் பலர் பொறுப்புகளில் இருந்து விலகுவர் என்று எதிரபார்க்கப்படுகிறது. இந்த நெருக்கடியால் -





பிரதமர் பதவி விலகுவாரா? பொதுத் தேர்தலை அறிவிப்பாரா? அல்லது கட்சியினரை எதிர்த்துக்
கொண்டே பதவியில் நீடிப்பாரா? இவ்வாறான கேள்விகள் லண்டன்அரசியல் களத்தைச் சூடுபிடிக்கச்செய்துள்ளன.





கட்சியில் இதுவரை ஜோன்சனை ஆதரித்து வந்தவர்கள் உட்பட நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்கள், அமைச்சர்கள் எனப் பெரும்பான்மையானவர்கள் அவரைப் பதவியில் இருந்து விலகுமாறு கேட்டிருக்கின்றனர்.





நேற்றுமுன்தினம் பதவி விலகிய நிதி அமைச்சரின் இடத்துக்குப் ஜோன்சனால் உடனடியாக நியமிக்கப்பட்ட புதிய அமைச்சர் நதீம் ஷஹாவியும் (Nadhim Zahawi) அவரைப் பதவிவிலகுமாறு கோருகின்ற அணியில் இணைந்துள்ளார்.





ஜோன்சனின் தீவிர ஆதரவாளரான உள்துறை அமைச்சர் பிரீதி பட்டேல் (Priti Patel) தலைமையில் சிரேஷ்ட அமைச்சர்கள் குழு ஒன்று நேற்று மாலை பிரதமர் அலுவலகத்துக்குச் சென்று ஜோன்சனைப் பதவி விலகுமாறு கேட்டுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.





எனினும் அவர் அதற்கு மசியவில்லை. அமைச்சுப் பொறுப்புகளுக்குப் புதியவர்களை நியமித்துக் கொண்டு அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக கட்சிக்குள் தொடர்ந்தும் அரசியல் மோதலில் ஈடுபடுவதற்குத் தன்னைத் தயார்ப்படுத்தி வருவதையே அவரது செயல்கள் உணர்த்துகின்றன.





கட்சியின் விதிகள் அடுத்த ஓராண்டு காலத்துக்கு ஜோன்சன் தலைமைப் பதவியில் நீடித்திருப்பதைப் பாதுகாக்கின்றன. பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்றை எதிர்கொண்டு அதில் வென்றால் அடுத்த 12 மாத காலப்பகுதிக்குள் இரண்டாவது வாக்கெடுப்பை அவருக்கு எதிராக நடத்த முடியாது.





ஆனால் இந்த விதியைத் திருத்தி உடனடியாகவே அவர் மீது மற்றொருநம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்குக் கட்சியின் முக்கிய உயரமட்டங்கள் முயற்சித்து வருகின்றன.





ஒரே நாளில் 42 பேர் ஜோன்சனின் அரசிலிருந்து விலகி இருப்பது வரலாற்றில் இதற்கு முன்பு எந்த ஒரு பிரதமரும் தனது கட்சிக்குள் சந்தித்திருக்காத பெரும் அரசியல் நெருக்கடி என்று பிரிட்டிஷ் செய்தி ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.





பிரதமர் பொறிஸ் ஜோன்சன் 'பார்ட்டிகேற்' (party gate) எனப்படுகின்ற பொது முடக்க கால மது விருந்துகள் விவகாரத்தில் தனது கட்சிக்குள்ளேயே நம்பிக்கையையும் செல்வாக்கையும் இழந்து பதவி கவிழும் நிலையைச் சந்தித்து மீண்டிருந்தார்.
முன்னுக்குப் பின் முரணான அவரது வாக்குமூலங்கள்





நம்பகத் தன்மையைச் சிதைத்து அவரது தலைமைத்துவம் மீது கேள்விகளை எழுப்பியிருந்தன.





பார்ட்டிகேற் முறைகேடு தொடர்பாக கடந்த மாதம் கட்சிக்குள் அவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. அதில் அவர் குறைந்த எண்ணிக்கையான கட்சி உறுப்பினர்களது ஆதரவுடன் ஒருவாறு தப்பிப் பிழைத்துப் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். ஆயினும் இந்த ஊழல் விவகாரத்தில் அவர் நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தினாரா? - பேய்க்காட்டினாரா-என்பது தொடர்பில் விசாரணைகள்நீடித்து வருகின்றன.





அதற்கிடையில் அந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முன்பே "கிறிஸ் பின்சர்ஊழல் முறைகேடு" (Chris PincherScandal) என்னும் புதிய சிக்கலில் அவர் மாட்டுப்பட நேர்ந்ததுள்ளது. பாலியல் நடத்தைத் தவறுகள் புரிந்தவர் எனக்கட்சிக்குள் குற்றம் சாட்டப்பட்டிருந்தகிறிஸ் பின்சர் என்ற எம். பியிடம்கட்சியின் கொறடா பொறுப்புகளை
ஒப்படைத்த விவகாரத்தில் பிரதமர்ஜோன்சன் கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக
இழக்க நேர்ந்துள்ளது. தற்போது பெருவாரியாக அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் பதவி விலகுவதற்கு பின்சர் விவகாரமே காரணமாகியிருக்கிறது.





தாஸ்நியூஸ் - பாரிஸ்.