'அடிப்படை மனித உரிமைகளில் கைவைக்க வேண்டாம்'

banner

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து இலங்கையர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தனது நிர்வாகம் மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.





கண்காணிப்பம் இன்று அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





அத்துடன் தமது கடிதத்தில் முக்கிய மனித உரிமை கவலைகளை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோடிட்டுக் காட்டியுள்ளது.





பொருளாதார முறைகேடு மற்றும் ஊழலுக்கு எதிரான பல மாதங்களாக இடம்பெற்ற பரவலான எதிர்ப்புகளுக்குப் பின்னர் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பதவி விலகியதை அடுத்துஇ 2022 ஜூலை 21 அன்று விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.





இந்தநிலையில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தவறான நிர்வாகம் மற்றும் உரிமை மீறல்களைத் தொடர்ந்து இலங்கை அரசியல் பொருளாதார மற்றும் மனித உரிமைகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.





அத்துடன் கருத்துச் சுதந்திரம் ஒன்றுகூடல் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளித்து பாதுகாப்புப் படைகளின் துஷ்பிரயோகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதேவேளையில் தகுந்த சமூகப் பாதுகாப்புக் கொள்கைகளை வகுத்து நிலவும் ஊழலைக் கையாள்வதன் மூலம் பொதுமக்களை மேலும் சிரமங்களிலிருந்து பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.





ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரிய சவால்களை எதிர்கொள்கின்றார். எனினும், கடுமையான அவசரகாலச் சட்டங்களை விதிப்பது போராட்டத் தலைவர்களை அரசியல் ரீதியாக கைது செய்தல் மற்றும் செயற்பாட்டாளர் குழுக்கள் மீது தீவிர கண்காணிப்பு ஆகியவை இலங்கையின் பயங்கரமான பிரச்சினைகளைத் தீர்க்காது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.





இலங்கை அரசு மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கடைப்பிடித்து நெருக்கடிக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்தால் மட்டுமே சர்வதேச பொருளாதார உதவி பயனுள்ளதாக இருக்கும் என்பதில் இலங்கையின் பங்காளி நாடுகள் தெளிவான உள்ளன.





எனவே, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படுமாறு கோரியுள்ள மீனாட்சி கங்குலி, ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்.





  • பழிவாங்கல் அல்லது கைதுக்கு அஞ்சாமல் மக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகவும் அமைதியாகவும் வெளிப்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • தெளிவற்ற அடிப்படை உரிமைகளை மீறும் அவசரகால ஒழுங்குமுறை விதிகளைத் திரும்பப் பெறவேண்டும்
  • பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இயற்றப்படும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னிச்சையாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும்.
  • பொருளாதார நெருக்கடியின் விளைவுகளிலிருந்து அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்க தவறான நிர்வாகம் மற்றும் ஊழலைத் தடுக்க புதிய சமூக பாதுகாப்பு அமைப்பை நிறுவ வேண்டும்.
  • உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் கூட்டுடன் ஊழல் நிதிகளுக்கான பாதுகாப்பை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இலங்கையில் இருந்து திருடப்பட்ட சொத்துக்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் உயர்மட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் மீது சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தி அதற்குப் பொறுப்பானவர்களை உரிய முறையில் தண்டிக்க வேண்டும்.




இதேவேளை, நாட்டில் சீர்திருத்தம் ஊழலுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே பல இலங்கையர்கள் தைரியமாக தெருக்களில் இறங்கினர்.





எனவே, போராட்டக்காரர்களை அமைதிப்படுத்த முயற்சிப்பதற்குப் பதிலாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சொல்வதைக் கேட்க வேண்டும் என்று மீனாட்சி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.