மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் நிற்கின்றோம் - புடினின் குரு சுட்டிக்காட்டு!

banner
உக்ரைன் போர் உலகப் போராக மாறுகின்றது என்று எச்சரித்திருக்கிறார் ரஷ்யாவின் பூகோள அரசியல் தத்துவாசிரியரும் அதிபர் புடினின் "குரு" என்று வர்ணிக்கப்படுபவருமாகிய அலெக்சாண்டர் டுகின் (Alexander Dugin).

போர் இரண்டு விளைவுகளை ஏற்படுத்தலாம். அதில் ஒன்று அணு ஆயுதப் பேரழிவு. ரஷ்யாவுக்கும் மேற்குக் கூட்டணிக்கும் இடையே இறுதி மோதல் நெருங்குகிறது - என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஐரோப்பிய - ஆசியா மையத்தில் ஒரு பேரரசாக (EuroAsian empire) ரஷ்யாவை விஸ்தரித்து விரிவுபடுத்துகின்ற (expansionism) கொள்கையின் தத்துவாசிரியர் என்று கருதப்படுபவர் டுகின். கடந்த மாதம் அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு கார்க் குண்டுத் தாக்குதலில் அவரது மகள் பலியனார் என்பது நினைவிருக்கலாம்.

அதிபர் புடின் நாட்டைப் போருக்குத் தயார்ப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட பின்னர், அதனை வரவேற்றுள்ள ரஷ்யாவின் தீவிர தேசியவாதிகளில் அலெக்சாண்டர் டுகின் முக்கியமானவர். உக்ரைன் போர் எவ்வாறு முடிவடையலாம் என்பது குறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் அவர், ரஷ்யா தோல்வியைச் சந்திக்க நேர்ந்தால் அணு ஆயுதத்தின் ஆபத்தை மறந்து செயற்படுகின்ற நிலை ஏற்படும். ஓர் அணு ஆயுதப் பேரழிவுக்கு (“nuclear apocalypse”) அது வழிகோலும் - என்று எச்சரித்திருக்கிறார்.

மொஸ்கோ அரச பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான டுகின், உக்ரைன் மீதான புடினின் படையெடுப்பை நியாயப்படுத்தி மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார். நாங்கள் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் இருக்கிறோம், எங்களை அங்கு தள்ளுவதில் வெறித்தனமாக இருப்பது மேற்குலகம்தான். போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா என்பது ஒரு திறந்த கேள்வி, ஆனால் அணுசக்திப் பேரழிவு ஒன்றுக்கான நிகழ்தகவு ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது-என்று டுகின் குறிப்பிட்டுள்ளார்.

தாஸ்நியூஸ் - பாரிஸ்.