தோட்டக் கம்பனிகளை அடிபணிய வைப்போம் - திகா சூளுரை!

banner
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கட்சி மற்றும் தொழிற்சங்க பேதமின்றி ஒற்றுமையாக செயற்பட்டால் தோட்டக் கம்பனிகளை நிச்சயம் அடிபணிய வைக்கலாம். இதற்கு சிறந்த சான்று, மஸ்கெலியாவில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை போராட்டமாகும்." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அத்துடன், தோட்டத் தொழிலாளர்களை, சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி அவர்களை முதலாளியாக்குவதே தனது இலக்கு எனவும், சஜித் தலைமையில் மலரும் புதிய ஆட்சியில் இந்த இலக்கு அடையப்படும் எனவும் அவர் கூறினார்.

பத்தனை, தலவாக்கலை, லிந்துலை ஆகிய பிரதேசங்களில் உள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட கமிட்டி தலைவர்களுடான சந்திப்பு கூட்டம் தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் இன்று (02.10.2022) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே திகாம்பரம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

" இன்பமோ, துன்பமோ என்றும் நாம் மக்கள் பக்கமே நிற்போம். அரசியலுக்கு வந்தது முதல் இன்றுவரை மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாலேயே மக்கள் பேராதரவை வழங்கி வருகின்றனர். மக்களுக்கு சேவையாற்ற முடியாத எந்தவொரு பதவியும் எமக்கு வேண்டாம். சுகபோக வாழ்க்கைக்காக அமைச்சு பதவிகளை ஏற்று பந்தா காட்டுவதற்கு நாம் தயாரில்லை.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தாலும் இது ராஜபக்சக்களின் மொட்டு அரசாங்கமாகும். அவர்கள் நினைப்பதே நடக்கின்றது. எனவேதான் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். நாமும் தேர்தலை கோருகின்றோம். ஆனால் தோல்வி அச்சத்தில் இந்த அரசாங்கம் உடனடியாக தேர்தலுக்கு செல்லாது. நாடாளுமன்றத்தின் பதவி காலம் முடியும்வரை காத்திருக்கும். எனினும், எப்போது தேர்தல் நடந்தாலும் தற்போதைய அரசாங்கம் மக்களால் விரட்டியடிக்கப்படும் என்பது மட்டும் உறுதி.

மக்கள் போராட்டம் வெடித்தால், தேர்தலுக்கு செல்ல வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்படும். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, வர்த்தமானிகளை வெளியிடுவதும், அதனை மீளப்பெறுவதும் வழமை. தற்போது ரணில் விக்கிரமசிங்கவும் அதனை செய்கின்றார். எதிர்ப்புகள் வலுத்ததால் உயர்பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி மீளப் பெறப்பட்டுள்ளது. எனவே, தீர்மானம் எடுக்கும்போது, மக்கள் நலன் குறித்து சிந்தித்தே முடிவெடுக்க வேண்டும்.

அதேவேளை, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஏமாற்றப்படுகின்றனர். அவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை. தொழிலாளர்கள் பிளவுபட்டு காணப்படுகின்றனர். எனவே, தொழிலாளர்கள் ஒன்றிணைந்தால் கம்பனிகளை நிச்சயம் மண்டியிட வைக்கலாம். மஸ்கெலியாவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாமும் முழு ஆதரவு வழங்கினோம். வெற்றி பெற்றோம். ஆனால் வெற்றியை அவர்கள் கொண்டாடினார்கள், பரவாயில்லை, மக்களுக்கு நல்லது நடந்தால் சரி. எனவே, நாம் ஒற்றுமையாக இருப்போம்.

நல்லாட்சியின்போது காணி உரிமை வழங்கப்பட்டது, வீடுகள் வழங்கப்பட்டன. சஜித் தலைமையில் மலரும் அடுத்த ஆட்சியில் தோட்டத் தொழிலாளர்களை நிச்சயம் முதலாளிமார் ஆக்குவேன்." - என்றார்.